உலகின் உயரமான 10 கட்டிடங்களும் அவற்றின் விபரங்களும்

Building
Spread the love

தற்போதைய காலகட்டத்தில் உலகில் அனைத்திலுமே போட்டி நிலவுகிறது. சிறிய விடயங்களிலிருந்து பெரிய விடயங்கள் வரை எல்லாவற்றிலும் போட்டி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் உலகில் உயரமான கட்டிடம் என்ற அடிப்படையிலும் போட்டி நிகழ்கிறது. தனது நாட்டை உலகளாவிய ரீதியில் பெருமைபட வைக்கும் ஒரு நோக்கமாகவும் அமைகிறது. உலகில் அதிக உயரமான கட்டிடங்களை கொண்ட நாடு சீனா ஆகும். உலகின் முதல் 10 உயரமான கட்டிடங்களின் விபரங்ளை இனி பார்க்கலாம்.

1. பூர்ஜ் கலீஃபா (Burj Khalifa)

உலகிலேயே உயரத்தில் முதலிடத்தை பிடிக்கும் இக்கட்டிடம் துபாயில் அமைந்துள்ளது. இதன் உயரம் ஏறத்தாழ 829.8 மீட்டராகும் (2722 அடி). இதன் கட்டுமான பணிகள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதனை கட்டி முடிப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தில் மொத்தமாக 57 உயர்த்திகளும் (Elevator) 8 இயங்கும் படிக்கட்டுகளும் (Escalator) உள்ளன. மொத்தமாக 163 மாடிகள் இருப்பதுடன் அவற்றில் 9 மாடிகள் கட்டிட பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டிடத்தில் ஹோட்டல், ஆடம்பர மனைகள், அதி சொகுசு தங்குமிடங்கள், நூலகம், நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மேலும் பல அம்சங்களை கொண்டிருக்கின்றது.



2. ஷாங்காய் கோபுரம் (Shanghai Tower)

இக்கட்டிடம் சீனாவில் ஷாங்காயின் புடோங் (Pudong) எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது 632 மீட்டர் (2073 அடி) உயரம் கொண்டது. இக்கட்டிடம் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இக்கட்டிட கட்டுமான பணிகளுக்கு ஏறத்தாழ 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடம் 128 மாடிகளை கொண்டிருக்கிறது. அத்துடன் உலகிலேயே 2 வது அதிவேக உயர்த்திகள் இக்கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் வேகம் செக்கனுக்கு 20.5 மீட்டர் (20.5m/s) ஆகும்.

3. அப்ரஜ் அல் பெய்ட் (Abraj Al Bait)

இது சவுதி அரேபியாவில் மக்கா எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டிடமாகும். அந்த உயரமான கட்டிடத்தை சுற்றி மேலும் 6 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, ஒரு தொகுதியாக காணப்படுகிறது. நடுவில் இருக்கும் உயரமான கட்டிடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கடிகார முகம்தான் உலகிலேயே பெரிய கடிகார முகமாகும். அத்துடன் இக்கட்டிடம் உலகின் 3 வது உயரமான கட்டிடமாக உள்ளது. இதன் உயரம் 601 மீட்டர் (1971 அடி) ஆகும். இக்கட்டிடத்தொகுதியில் ஹோட்டல்களும் மனைகளும் அடங்கியுள்ளன. இத்தொகுதியின் கட்டுமான செலவு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடிகார கோபுரத்தில் 120 மாடிகள் உள்ளன. மேலும் 96 உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டிட அமைப்பு பணிகள் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

4. பின்ங் என் ஃபைனான்ஸ் செண்டர் (Ping An Finance Centre)

உலகத்தில் உயரத்தில் 4 வது இடத்தில் இருக்கும் இக்கட்டிடம் சீனாவில் 2 வது இடத்தில் உள்ளது. சீனாவில் குவாங்டாங் (Guangdong) எனும் மாகாணத்தில் ஷென்சேன் (Shenzhen) எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மொத்தமாக 599 மீட்டர் (1965 அடி) உயரமுடையது. இக்கட்டிடத்தில் 115 மாடிகள் இருப்பதுடன் நிலத்திற்கு கீழ் 5 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 80 உயர்த்திகள் பயன்படுத்தப்படும் இக்கட்டிடத்தில் காரியாலயங்கள், ஹோட்டல்கள், மாநாட்டு கூடம் மற்றும் சில்லரை கடைகள் உள்ளன.



5. லோட்டே உலக கோபுரம் (Lotte World Tower)

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்தின் நிர்மாண பணிகள் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடங்கப்பட்டுள்ளன. இக்கட்டிடம் தென்கொரியாவின் சியோல் (Seoul) எனும் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் ஹோட்டல், மனைகள், தனியார் காரியாலயங்கள் மற்றும் கவனிப்பு தளங்கள் என்பன உள்ளன. இதன் மொத்த உயரம் 554.5 மீட்டர் (1819 அடி) ஆகும். இதில் 123 மாடிகளும் நிலத்துக்கடியில் 6 மாடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

6. ஒரு உலக வர்த்தக மையம் (One World Trade Center)

இக்கட்டிடம் அமெரிக்காவின் நியூயோர்க் (New York City) நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள உயரமான கட்டிடமாக இருந்தபோதிலும் உலக அளவில் 6 வது இடத்தில் உள்ளது. இதனுடைய மொத்த உயரமானது 541.3 மீட்டர் (1776 அடி) ஆகும். இக்கட்டிடத்தில் 104 மாடிகள் உள்ளன. இதன் அமைப்பு வேலைகளுக்கு 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதன் நிர்மாண பணிகள் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி தொடங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் 73 உயர்த்திகள் பொருத்தப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவிரவாத விமான தாக்குதலால் பழைய உலக வர்த்தக மையம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அதன்பின் வடக்கு கோபுரம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் புதிதாக இக்கட்டிடம் அமைக்கப்பட்டது.

7. குவாங்ஷோ சிடிஎஃப் நிதி மையம் (Guangzhou CTF Finance Centre)

111 மாடிகளை கொண்டு வானை நோக்கி இருக்கும் இக்கட்டிடம் சீனாவில் குவாங்சோ எனும் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 530 மீட்டர் (1739 அடி) உயரம் கொண்டது. இது சீனாவில் 3 வது உயரமான கட்டிடமாகும். இக்கட்டிடத்தில் 111 மாடிகளுடன் 5 மாடிகள் நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 95 உயர்த்திகள் உபயோகிக்கப்படுகின்றன. இக்கட்டிடத்தில் கடைத்தொகுதி, மனைகள், அறைகள், காரியாலயங்கள், ஹோட்டல் போன்றவை காணப்படுகின்றன. இக்கட்டிடம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டுள்ளது. நிர்மாண வேலைகளை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர்.



8. டியான்ஜின் சிடிஎஃப் நிதி மையம் (Tianjin CTF Finance Centre)

இக்கட்டிடம் சீனாவின் டியான்ஜின் எனும் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் இன்னும் நடந்துகொண்டுதான் உள்ளன. 2013 ஆம் ஆண்டு இதன் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 530 மீட்டர் (1739 அடி) உயரம் கொண்டது. இதில் 97 மாடிகளுடன் 4 நிலத்தடி மாடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 81 உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கட்டிடத்தில் ஹோட்டல், மனைகள், அறைகள் மற்றும் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

9. சீனா ஷுன் (China Zun)

தற்போது இதன் இறுதிகட்ட கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்திற்குள் முடிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இதன் உயரம் 528 மீட்டர் (1732 அடி) ஆகும். இக்கட்டிடம் சீனாவின் பீஜிங் (Beijing) எனும் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டிடத்தில் 108 மாடிகள் உள்ளன. இக்கட்டிடம் சீனாவின் பண்டைய மது கொள்கலனின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிட பணிகள் முடிவிற்கு பிறகு காரியாலயங்கள், ஆடம்பர மனைகள் மற்றும் ஹோட்டல்கள் கொண்ட கலவையான பயன்பாட்டு கட்டிடமாக உபயோகிக்கப்படும்.



10. தாய்பெய் 101 (Taipei 101)

இது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு இதன் அமைப்பு வேலைகள் 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடம் தாய்வானின் தாய்பெய் எனும் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் உயரத்தை பார்த்தால் 508 மீட்டர் (1667 அடி) ஆகும். இதன் கட்டுமானத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை 1.934 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இக்கட்டிடத்தில் 101 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நிலத்திற்கு கீழ் 5 மாடிகள் உள்ளன. இங்கு 61 உயர்த்திகளை பயன்படுத்துகிறார்கள். இவ்வுயர்த்திகள் மணிக்கு 60.6Km வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக உயர்த்திகள் ஆகும். 5 வது மாடியிலிருந்து 89 வது மாடிக்கு செல்ல வெறும் 37 செக்கன்கள் மட்டுமே செல்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *