விஜயின் மெர்சல் புரிந்த புதிய சாதனைகள்

Movie
Spread the love

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வெளியானது விஜயின் மெர்சல் திரைப்படம். இத்திரைப்படம் இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 251 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து கடந்த வருடத்திற்கான ஒரு மெகா ஹிட் படமானது. இதை அட்லீ இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதை தேனாண்டால் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. வெளியானதிலிருந்து பல சாதனைகளை செய்த இத்திரைப்படம் இன்னும் சாதனைகளை புரிந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்திய தமிழ் சினிமாவில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தான் அதிகமாக வெளிநாடுகளில் திரையிடப்பட்டு சாதனைகளை புரிந்தன. இந்நிலையில் மெர்சல் திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டு சீனாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முதல் வெளியான பாகுபலி திரைப்படம் சீனாவில் வெளியான போதிலும் சொல்லும் அளவிற்கு பெரிய வசூலை பெறாத நிலையில் மெர்சல் வெளியாகி குறைந்தது 50 கோடி வசூல் செய்தால் கூட ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை முறியடித்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த நடிகராக மாறிவிடுவார் விஜய்.



சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த பீ.ஐ.எஃப்.ஏ.என் (BIFAN) சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் திரைப்படம் ஆசியாவில் சிறந்த சினிமா என்ற பிரிவில் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. படத்திற்கு அதிக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்ததாக மெர்சல் பட தயாரிப்பாளர்களுல் ஒருவரான ஹெமா ருக்மணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது மெர்சல் திரைப்படம். அந்தவகையில் இம்மாதம் 22 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள ஐ.ஏ.ஆர்.ஏ (IARA) விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எனினும் இணைய வாக்கெடுப்பு அடிப்படையில் சிறந்த சர்வதேச நடிகர் பிரிவில் இறுதிகட்ட தெரிவு நிலைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

விஜயின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு அளவில்லாத சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



இம்மாதம் 14, 15 ஆம் திகதிகளில் துபாயில் நடைபெற இருக்கிறது சர்வதேச தென்னிந்திய திரைப்பட விழா (SIIMA). இதில் தென் இந்திய சினிமாவில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கலந்துகொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில் மெர்சல் திரைப்படம் மொத்தமாக 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் போன்ற விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தமிழ் ரேடியோ சிடி சினி விருதுகள் (Radio City Cine Awards Tamil) விழாவில் மெர்சல் திரைப்படத்திற்கு பிடித்த நடிகர், பிடித்த இயக்குநர், பிடித்த பாடகர், பிடித்த பாடலாசிரியர், பிடித்த படம் மற்றும் பிடித்த நகைச்சுவை நடிகர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.



விஜயின் பட வரிசையில் இது ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது. பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்ற மெர்சல் இன்னும் பல சாதனைகளை புரிந்து கொண்டுதான் இருக்கிறது. படக்குழுவிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *