டெங்கு நுளம்பு பற்றிய முக்கியமான தகவல்கள்

Creature
Spread the love

இன்றைய நவீன உலகத்தில் வாழ்க்கை முறை பரபரப்பாக இருப்பதோடு, நோய்களும் பரவலாக பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் டெங்கு காய்ச்சல் ஒரு கொடிய நோயாக மாறிவிட்டது. அதற்கு இதுவரை மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு பலமான வைரஸாக இருக்கிறது டெங்கு வைரஸ். உலகில் ஏறத்தாழ 3500 க்கும் மேற்பட்ட நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த டெங்கு காய்ச்சலை பரப்புவது இரண்டு நுளம்பு இனங்கள் தான். ஏடிஸ் (Aedes) வகையைச்சார்ந்த ஏடிஸ் இஜிப்டி (Aedes Aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) ஆகிய நுளம்பு இனங்கள் தான் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.

ஏடிஸ் இஜிப்டி (Aedes Aegypti)

இவ்வகை நுளம்புகள் டெங்கு காய்ச்சலை மட்டுமன்றி மஞ்சள் காய்ச்சல், சிக்கன்குன்யா போன்ற நோய்களையும் பரப்புகின்றன. இது அண்ணளவாக 4 இலிருந்து 7 மில்லிமீற்றர் வரை வளரக்கூடிய கறுப்பு நிற சிறிய நுளம்பாகும். எனினும் அதன் கால்களில் வெள்ளை நிற அடையாளங்களும் உடம்பில் வெள்ளை நிற வரிகளும் இருக்கும். இவ்வகை நுளம்புகளின் ஆண் நுளம்பை விட பெண் நுளம்பு சற்று பெரிதாக இருக்கும். அவற்றின் உணர்கொம்பின் நுனியில் இருக்கும் வெள்ளை அல்லது வெள்ளி நிற செதில்களில் அவை ஆண், பெண் என வேறுபடுகின்றன.இவ்வகை நுளம்பு பகல் வேலைகளில் தாக்கக்கூடியவை. அண்ணளவாக சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணித்தியாலத்திற்கு பிறகும் சூரிய அஸ்தமத்திற்கு சில மணி நேரம் முன்பும் இருக்கும் இவ்விடைப்பட்ட காலத்தில் இவ்வகை நுளம்புகள் மிக சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவை. இந்நுளம்புகள் வீட்டிற்குள் இருக்கும் மறைவிடங்களிலும், இருள் நிறைந்த இடங்களிலும் ஓய்வெடுக்கின்றன. இவற்றின் ஆண் நுளம்புகள் மனிகர்களையோ, விலங்குகளையோ கடிப்பதில்லை. அவை பழச்சாற்றை உண்டு வாழ்கின்றன. ஆனால் பெண் நுளம்புகள் பழச்சாறு மட்டுமன்றி இரத்தத்தையும் உண்டு வாழ்கின்றன. ஆண் நுளம்புகளின் உணர்கொம்பு பழச்சாறு உண்ணும் வகையிலும் பெண் நுளம்புகளின் உணர்கொம்பு இரத்தத்தை குடிக்கும் வகையிலும் அமைக்கப்பெற்றிருக்கும். தன் முட்டைகள் முதிர்ச்சியடைவதற்காக பெண் நுளம்புகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் இவை மனிதர்களின் கணுக்கால் பகுதியிலும் பாதங்களிலும் மறைந்து நின்று கடிக்கின்றன. இவ்வகை நுளம்புகள் மனிதர்கள் வசிக்குமிடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதற்கு விரும்புகின்றன. அத்துடன் மற்ற உயிரினங்கள் இல்லாத சுத்தமான நீரில் முட்டையிடுவதற்கு விரும்புகின்றன. சாதாரணமாக 10 இலிருந்து 14 நாட்களுக்குள் அவைகள் முட்டையிலிருந்து வெளிவந்து பருவமடைந்த நிலையை அடைகின்றன.

ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus)

இவ்வகை நுளம்புகள் அதிகமாக தென்கிழக்கு ஆசியாவில் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. இவற்றின் நிறமும் கறுப்பாக இருப்பதோடு உடம்பு பகுதியிலும் கால்களிலும் வெள்ளை நிற வரிகள் காணப்படுகின்றன. இதனால் இவற்றை “ஏசியன் டைகர் மொஸ்கிடோ” (Asian Tiger Mosquito) என்றும் அழைப்பார்கள். இவை சாதாரணமாக 2 இலிருந்து 10 மில்லிமீற்றர் வரை வளரும். இவ்வகை ஆண் நுளம்புகள் பெண் நுளம்புகளை விட அண்ணளவாக 20% சிறியவையாக காணப்படுகின்றன.ஆண் நுளம்புகளின் உணர்கொம்பை பெண் நுளம்புகளின் உணர்கொம்புடன் ஒப்பிடுகையில் புதர் போன்ற செதில்கள் இருப்பதோடு பெண் நுளம்புகளின் சத்தத்தை உணர்வதற்கான செவிப்புல வாங்கிகளையும் ஆண் நுளம்புகள் கொண்டிருக்கும். ஆண் நுளம்புகளின் உணர்கொம்பு பெண் நுளம்புகளின் உணர்கொம்பை விட சற்று நீளமாக இருக்கும். ஆண் நுளம்புகளின் கணுக்கால்கள் வெள்ளி போன்ற நிறத்தை கொண்டிருக்கும். பெண் நுளம்புகளுக்கு சற்று அந்த நிறம் குறைவாக இருக்கும். இவ்வின ஆண் நுளம்புகளும் பழச்சாற்றை தான் உணவாக உட்கொள்கின்றன. பெண் நுளம்புகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சிகின்றன. இவைகளும் பகல் வேலையில் தான் தாக்குகின்றன. இவை மற்ற நுளம்பு வகைகளை போல் முட்டையிடுவதில்லை. தேங்கிய நிலையில் 30 மில்லிலீற்றர் அளவை விட குறைவாக நீர் இருந்தால் கூட முட்டையிலிருந்து நுளம்பு உருவாவதற்கு போதுமானதாக இருக்கும். தேங்கிய நிலையில் உள்ள நீரில் மட்டுமல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரில் கூட இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவ்வினம் பூக்கள் இருக்கும் நீர்நிலைகளில் முட்டையிடுவதற்கு அதிகம் விரும்புகின்றன.இவ்விரு வகை நுளம்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சூழலை சுத்தமாக வைப்பதும் நீரை தேங்கவிடாது செய்வது தான் ஒரே வழி. அத்துடன் பகல் வேலைகளில் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *