இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றில் நன்மைகளும் இருக்கின்றன; அதேபோல தீமைகளும் இருக்கின்றன. தீமைகள் பற்றி சொல்லப்போனால் குறிப்பாக வைரஸ் பற்றி சொல்லலாம். வைரஸால் கைத்தொலைபேசியை முற்றிலுமாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஒவ்வொரு வைரஸும் ஒவ்வொரு பணிக்காக உருவாக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
டேடா பயன்பாடு (Data Usage)
கைத்தொலைபேசியில் அளவுக்கு அதிகமாக டேடா பயன்படுத்தப்படுகிறதென்றால் கண்டிப்பாக வைரஸ் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியும். அதாவது நீங்கள் பயன்படுத்தாமலே உங்களது கைத்தொலைபேசியின் டேடா குறைகிறதென்றால் வைரஸ் இருக்க வாய்ப்பு உண்டு. வைரஸ் செயற்பட ஆரம்பித்துவிட்டால் பின்னணியில் தன் பணிகளை இணையத்தினூடாக செய்து கொண்டிருக்கும். ஆனால் அதை உங்களால் நேரடியாக தெரிந்துகொள்ள முடியாது. நீங்கள் உங்களது சேவை வழங்குநரிடம் (Service Provider ) செயற்படுத்தி இருக்கும் டேடா திட்டத்தை (Data Plan) வைத்து தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் 1 GB டேடா செயற்படுத்தியுள்ளீர்கள் என்றால் அதில் 100 MB அளவு நீங்கள் பயன்படுத்தி இருப்பீர்களேயானால் மீதமுள்ள அனைத்து டேடாவும் முடிவடைந்திருந்தால் கண்டிப்பாக உங்களது ஸ்மார்ட்போனின் பின்னணியில் பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். ஆகவே வைரஸ் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.
பணி இடையில் நிறுத்தப்படல் (Stuck)
சாதாரணமாக கைத்தொலைபேசியில் அப்ஸ் (Apps) பயன்படுத்தபடும் பொழுது அது திடீரென செயற்படாமல் அப்படியே நின்றுவிடும். இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்தால் வைரஸ் இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் பொதுவாக வைரஸ் கைத்தொலைபேசியின் இயக்க முறைமையில் (Operating System) குறுக்கிட்டு அதன் பணிகளை தடை செய்வது தான் அதன் முக்கியமான வேலையாகும். அவ்வாறு இருக்கும் போது ஸ்மார்ட்போன் அடிக்கடி தொழிற்படாமல் அப்படியே நின்றுபோனால் (Stuck) வைரஸ் அந்த மென்பொருளின் பணியில் குறுக்கிட்டு நிறுத்துகிறது என்று சொல்லமுடியும்.
பாப்–அப்ஸ் (Pop-ups)
நீங்கள் நிறைய இணையதளங்களில் பாப்-அப்ஸ் வருவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் சந்தேகத்துக்குறிய வகையில் அல்லது வழக்கத்துக்கு மாறான பொருட்கள் மற்றும் சேவைகளை பிரதிபலிக்கும் பாப்-அப்ஸ்கள் வருமாயின் கண்டிப்பாக கைத்தொலைபேசியில் வைரஸ் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான பாப்-அப்ஸ் வருமாயின் அவற்றை க்ளிக் (Click) செய்ய வேண்டாம். பொதுவாக இவ்வகை பாப்-அப்ஸ்களில் வரும் வைரஸ்கள் கைத்தொலைபேசியை பழுதடையச்செய்யவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தன்னிக்க செயற்பாடுகள்
தன்னியக்க செயற்பாடுகள் மூலம் உங்களது கைத்தொலைபேசியில் கட்டணங்கள் அறவிடப்படலாம். அதாவது வைரஸ் செயற்படுமாயின் தானாகவே மற்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புகள் (Calls) ஏற்படுத்தல் அல்லது குறுந்தகவல்கள் (Messages) அனுப்புதல் போன்ற செயல்களை செய்யும். அதாவது நீங்கள் யாருக்கும் அழைப்புகள் ஏற்படுத்தியோ அல்லது குறுந்தகவல்கள் அனுப்பியோ இருக்கமாட்டீர்கள். ஆனால் உங்களது ஸ்மார்ட்போனில் அவையெல்லாம் நடந்திருக்கலாம். அவ்வாறு இருப்பின் அது வைரஸால் செய்யப்பட்ட செயற்பாடாக இருக்கக்கூடும்.
தேவையில்லாத ஆப்ஸ் (Apps) இருத்தல்
நீங்கள் பதிவிரக்கம் செய்யாமலே சில ஆப்ஸ் பதிவிரக்கம் செய்யப்பட்டிருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். உங்களால் பதிவிரக்கம் செய்யப்படாத ஆப்ஸ் இருந்தால் அல்லது நீங்கள் பதிவிரக்கம் செய்த ஆப்ஸை போலவே ஆப்ஸ் இருந்தால் அது வைரஸ் செயற்படுவதற்கான அறிகுறி ஆகும். அதாவது வைரஸை நீங்கள் கண்டறியாமல் இருப்பதற்காகவே நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆப்ஸை போலவே வைரஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. அவ்வாறு ஐயத்துக்குறிய வகையில் ஆப்ஸ் இருந்தால் உடனடியாக அழிக்க வேண்டும்.
மின்கலத்தின் மின்சக்தி சீக்கிரமாக குறைதல் (Decreasing Battery Charge)
வைரஸ்கள் அதிகமாக செயற்படும் போது கைத்தொலைபேசியின் மின்கல சக்தி விரைவாக குறையும். ஏனென்றால் பின்னணியில் கைத்தொலைபேசி அதிகளவு செயற்படும் பொழுது அதிக மின்சக்தி செலவிடப்படும். இவ்வாறு மின்சக்தி சீக்கிரம் குறையும் போது வைரஸ் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.