New Smart Tamil Logo with Stroke

பாரதியார் வரலாறு | Bharathiyar History in Tamil

Bharathiyar history in Tamil

நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார் (Bharathiyar in Tamil) ஆவர். இவர் பெண் விடுதலை, தமிழர் நலம் பேணுதல், வர்ண பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை தம் கவிதைகள் மூலம் சமூகத்திற்கு தெரிவித்துவந்துள்ளார்,

தன் எழுத்து மூலமாக மக்கள் மத்தியில் விடுதலை உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஊட்டியவர் பாரதி என்றால் மாற்றுக்கருத்து இல்லை.

இவர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை போராளி, சமூக சீர்திருத்தவாதி என பல பரிமாணங்களை கொண்டவர்.  இனி, பாரதியார் வரலாறு (Bharathiyar history in Tamil) பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பாரதியார் பிறப்பு

சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். ஆயினும் சுப்பையா என்றே அழைக்கப்பட்டார்.

இவரது தந்தையார் பெயர் சின்னசாமி ஐயர் மற்றும் தாயார் பெயர் இலக்குமி அம்மாள் ஆகும். பாரதியாருக்கு ஐந்து வயது இருக்கும் போதே தாயாரான இலக்குமி அம்மாள் இறந்து விடுகிறார். அதன் பின் தன் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

பாரதியாரின் இளமைக் காலம்

சிறுவயதிலேயே தமிழ் மொழிப்பற்றும் புலமையும் பாரதிக்கு இருந்தது. தனது ஏழு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே கவிதைகள் எழுதத்தொடங்கினார்.

பதினோறாவது வயதில் கவிபாடும் திறனை வெளிப்படுத்தினார். எட்டயப்புர மன்னன்  இவரது கவிப்புலமையை பாராட்டி மகிழ்ந்தார். இவருக்கு எட்டயப்புர மன்னன் “எட்டப்ப நாயக்கர் பாரதி” என்றபட்டத்தை வழங்கினார்.

அதன் பிறகே சுப்பிரமணிய பாரதியார் (Subramaniya Bharathiyar) என போற்றப்பட்டார். பாரதியார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி போன்றவற்றில் புலமை உள்ளவராக திகழ்ந்தார்.

பாரதியாரின் இல்லற வாழ்க்கை

Bharathiyar history in Tamil
Bharathiyar History in Tamil

1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்து கொண்டார். 1898ஆம் ஆண்டு அவருடைய தந்தையின் இழப்புக்கு பின்னர் கொடிய வறுமையை சந்தித்தார் பாரதி.

இது குறித்து எட்டயப்புர மன்னருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். பின் சிறிது காலம் எட்டயப்புர அரண்மனையில் வேலை செய்தார். சில காலத்தின் பின் அப்பணியை விட்டு காசிக்கு சென்றார்.

1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு வரை காசியிலிருந்தார். பின் எட்டயப்புர மன்னரின் அழைப்பை ஏற்று அரண்மனைக்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து சில காலம் பாட்டெழுதாது இருந்த பாரதி 1904ஆம் ஆண்டு “விவேகபானு” என்ற இதழுக்கு பாடல் எழுதினார். அதன் பிறகு இதழாசிரியராகவும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

பாரதி செல்லம்மாளுக்கு 1904ஆம் ஆண்டு தங்கம்மாள் என்ற குழந்தையும் 1908ஆம் ஆண்டு சகுந்தலா என்ற குழந்தையும் வாரிசாக தோன்றினார்கள்.

பாரதியாரின் பத்திரிகைப் பணிகள்

சென்னையில் சுப்பிரமணிய ஐயர் என்பவர் “சுதேச மித்திரன்” என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் பாரதியாரின் எழுத்தாற்றலை நன்கு அறிந்திருந்தார்.

இதனால், பாரதியை தன் இதழியலில் ஓர் அங்கத்தவராக ஆக்க எண்ணினார். இப்பத்திரிகையின் துணை ஆசிரியர் என்ற பொறுப்பை பாரதிக்கு வழங்க பாரதியும் அதை விரும்பி ஏற்கலானார்.

1904ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1906 ஆகஸ்ட் வரை சுதேச மித்திரனில் பணியாற்றினார். பின் சிலகாலம் இடைவெளி விட்டிருந்தார். அவ்விடைவெளிக்கு பின், தன் இறுதி காலமான 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை அவ்விதழிலேயே உதவி ஆசிரியராக பணி புரிந்தார்.

அதைத் தொடர்ந்து “இந்தியா” எனும் பத்திரிகையிலும் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இப்பத்திரிகை மூலமாகத் தான், ஆங்கிலேயருக்கு எதிராக எழுதி தன் கைப்பக்குவத்தை காட்டினார்.

இவரது எழுத்தானது ஆங்கிலேயர் ஆட்சியை கடுமையாக சாடியது. இதனால், பாரதி மீது ஆங்கிலேயருக்கு கடும் கோவம் இருந்தது. பாரதி தன் பேனை முனையை கொண்டு சுதந்திர எழுச்சி மற்றும் புரட்சிகரமான பாடல்களையும் கட்டுரைகளையும், கேலி சித்திரங்களையும் வெளியிடுவதை போராட்ட உத்தியாக பயன்படுத்தினார்.

இதன் காரணமாக, ஆங்கில அரசு இந்தியா பத்திரிகைக்கு தடை விதித்தது. பாரதியார் 1918ஆம் ஆண்டு சில காலம் பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்து பாண்டிச்சேரியிலிருந்து வெளியே வந்தவுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 34 நாட்கள் சிறைவாசம் செய்து விடுதலை ஆனார். விடுதலைக்கு பின் மனைவியின் ஊரான கடையம் என்றவூரில் தங்கினார்.

பாரதியார் சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத பத்திரிகையிலும் ஆசிரியராக கடமை ஆற்றினார். மேலும் புதுச்சேரி, கர்மயோகி, சூரியோதயம், தர்மம் என்ற இதழ்களிலும் ஆசிரியராக இருந்தார்.

“யங் இந்தியா” என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியாராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதியாரின் இலக்கியப் பணிகள்

இவர் தமிழ் பற்றுடையவராகவும் பன்மொழித்திறன் உடையவராகவும்  இருந்தார். பிறமொழிச் சிறப்புடைய நூல்களை தமிழில் மொழிப் பெயர்த்தார். மேலும், இந்திய விடுதலைக்காக “பாஞ்சாலி சபதம்” என்ற இலக்கியத்தை தோற்றுவித்தார்.

விடுதலைப் போரை பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத மாதாவாகவும் கொண்டு இப்படைப்பை தோற்றுவித்தார். இது இரு பாகங்களை கொண்டது. மேலும் சூழ்ச்சி சருக்கம், சூதாட்ட சருக்கம், அடிமை சருக்கம், துகிலுரிதல்  சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களை கொண்டது.

1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தமை குறிப்பிடத்தக்கது. 1949ஆம் ஆண்டு பாரதியின் நூல்கள் யாவும் தமிழ் நாடு மாநில அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே நாட்டுடைமை ஆக்கப்பட்ட முதல் இலக்கியம் பாரதியினுடையதாகும்.

பாரதியின் படைப்புக்கள்

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • புதிய ஆத்திச்சூடி
  • பாப்பா பாட்டு
  • ஞானப்பாடல்கள்
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • பாரதியார் பகவத் கீதை
  • பாரதி அறுபத்தாறு
  • தோத்திரப் பாடல்கள்
  • விடுதலைப் பாடல்கள்
  • விநாயகர் நான்மணி மாலை
  • நவதந்திரக் கதைகள்
  • உத்தம வாழ்க்கை சுதந்திர சங்கு
  • சின்னஞ்சிறு கிளியே
  • ஞானரதம்
  • சந்திரிகையின் கதை
  • இந்து தர்மம்
  • ஆறில் ஒரு பங்கு பொன் வால் நரி

பாரதியார் வேறு பெயர்கள்

  • சுப்பையா
  • பாரதியார்
  • முண்டாசுக் கவிஞர்
  • மகா கவி
  • சக்தி தாசன்
  • தேசிய கவி
  • மக்கள் கவி
  • வரகவி
  • தமிழ்க்கவி
  • விடுதலைக் கவி

பாரதியார் இறப்பு

பாரதியார் (Bharathiyar,) 1921ஆம் ஆண்டு ஜீலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கே கோவில் யானையால் தாக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டார்.

இவ்வாறு தாக்கப்பட்டதன் பிறகு கடும் வயிற்றுக் கடுப்பு பிணியில் அவதிப்பட்டார். அதன் பின் 1921ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி விடியற்காலை 1.30 மணியளவில் காலமானார்.

இறக்கும் போது இவரது வயது 39 ஆகும்.

முடிவுரை – Bharathiyar History in Tamil

தன்னிகரில்லாத திறமையும் புலமையும் உடையவரான மகாகவி பாரதியின் (Mahakavi Bharathiyar) பெயர் இன்றும் உலகத் தமிழரால் உச்சரிக்கப்பட்டு போற்றப்படுகிறது. தன் கவித்திறமையால் படித்தோருக்கு மட்டுமன்றி படிப்பறிவு இல்லாத பாமரனுக்கும் தன் கவி போய்ச் சேரும் வண்ணம் புதுக்கவி புனைந்தார்.

கவித்துவத்தில் புதுமையை கொண்டு வந்த பெருமையும், தன் எழுத்தாற்றல் மூலம் சமூக எழுச்சியையும், பெண் விடுதலையையும் சீர்திருத்திய பெருமையும் முண்டாசுக் கவிஞரையே சாரும்.

இத்தகைய புகழ் வாய்ந்தவரான பாரதியை என்றும் நாம் போற்றிப் புகழ்ந்து பின்பற்றுவோம்.

பாரதியார் வரலாறு (Bharathiyar history in Tamil) பற்றிய இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த பதிவு பற்றிய கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்.

புதிய பதிவுகளை உடனே அறிய, மறக்காமல் எமது சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Instagram, போன்றவற்றை follow செய்யுங்கள்.

இயற்கை வளம்
நீரின் முக்கியத்துவம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top