New Smart Tamil

நீரின் முக்கியத்துவம் | Importance of water in Tamil

Importance of water in Tamil

இயற்கையன்னையாலும் இறைவனாலும் உலகுக்கு படைக்கப்பட்ட அற்புதமான வரப்பிரசாதமே நீர் ஆகும். “நீரின்ன்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க, நீரையே ஆதாரமாக கொண்டு இயங்குகிறது இவ்வுலகும் உயிர்களும்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று ” என்று திருக்குறள் மூலம் இவ்வுலகத்தையே வாழவைப்பது மழையாக இருப்பதனால் தான் இது அமிழ்தம் எனப் போற்றப்படுகிறது என்று பொருள்படுகிறது.

இத்தகைய வரமான நீரின் முக்கியத்துவமானது (Importance of water in Tamil) ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பூமியில் பிறந்த  எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக நீர் அமைகிறது. 6 அறிவுள்ள மானிடன் முதல் ஐயறிவுள்ள பிராணிகள் வரை அனைத்திற்கும் இது பொதுவே.

உணவில்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். ஆயினும், நீரின்றி ஒரு நாளை கடப்பதே சிரமம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது நீர்.

நீரின் முக்கியத்துவம் (Importance of water in Tamil)

நீரின் முக்கியத்துவத்தை பற்றி பார்ப்பின், மனிதனின் தாகத்தை தீர்ப்பதே முதல் முக்கியத்துவமாக இருக்கிறது.

மேலும், உடற் கழிவுகளை அகற்றி தூய்மைபடுத்துவதற்கும் உடல் வெப்பநிலையை தணித்து குளிர்மைபடுத்துவதற்கும் வாயினுள் உமிழ்நீர் சுரப்பியானது சரியாக சுரந்து செயற்படுவதற்கும் நீர் இன்றி அமையாது.

சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் வைத்திருப்பதற்கும் உடற் பருமனையும் பாரத்தையும் சரியாக பராமரிப்பதற்கும் நீர் மிக முக்கியமாகும்.

இவ்வாறு மனிதன் தன்னை உடல் ரீதியாகப் பராமரிப்பத்ற்கு அல்லது பாதுகாத்துக் கொள்வதற்கு நீர் துணைபுரிகிறது.

மேலும், சமையல் செய்வதற்கும் துணிகளை துவைப்பதற்கும் பாத்திரங்களை தூய்மைபடுத்தவும் வீட்டுத்தோட்டங்களை பராமரிப்பதற்குமென மனிதனின் அன்றாட பயன்பாட்டிற்கு நீர் மிக முக்கியமானதாக இருக்கிறது.

இதுபோலவே, ஐந்தறிவு விலங்கினங்களும் தாகத்தைப் போக்கிக்கொள்வதற்கும் உடற் சூட்டை தணித்துக்கொள்வதற்கும் நீர்வாழ் உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் நீர் அத்தியாவசியமானதாக விளங்குகிறது.

இன்னும் ஆராய்ந்தோமானால், விவசாயப் பயிர்செய்கைக்கும் நீர் மின்சார உற்பத்தி மற்றும் பாரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் நீர் முக்கிய இடம் பெறுகின்றது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குளிர்பானம் மற்றும் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என்று உதாரணங்களையும் முன்வைக்கலாம்.

உணவகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பொது நிறுவனங்களுக்கும் நீரின் தேவை மிகவும் அத்தியாவசியமானதொன்றாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலக உயிர்களுக்கு நீரின் பயன்பாடு தேவைக்கேற்ப மாறி மாறி அமைந்திருப்பதை தெளிவாக நோக்கக் கூடியதாக உள்ளது.

நீர் மாசடைதல் (Water pollution in Tamil)

Importance of water in Tamil
Importance of water in Tamil

இத்தனை முக்கியத்துவம் பெறுகின்ற நீரானது இன்று பல விதமாக மாசுக்குற்பட்டு பயன்பாட்டிற்கு உதவாமல் போகின்றமையை நம்மால் பார்க்க முடிகிறது.

நீர் மாசடைவு (Water pollution in Tamil) என்பது கெடுதியான விளைவைத் தரக்கூடிய இரசாயணமோ, குப்பைக் கூளங்களோ, உயிரினங்களுக்கு தீங்கினை தரக்கூடியவாறு ஆறுகள், குளங்கள், ஏரிகள், கடல்கள், கிணறுகள் மற்றும் நீர் பாயக்கூடிய இடங்களில் கலப்பதே இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலையும் பாதிப்படையச் செய்து, இதன் மூலம் நோய்கள் பரவி உயிரை கொல்லும் தன்மையை கொண்டது.

நீர் எவ்வாறு மாசடைகிறது என்பதை இன்னும் சற்று விருவாக பார்ப்பின், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள் என்பன ஆறுகள், ஏரிகள், நீரோடைகள் என்பவற்றில் கலக்கின்றன.

இவை இவ்வாறு கலப்பதன் காரணமாக நீர் அசுத்தமாகி குடிப்பதற்கு உகந்ததற்று போய் கிருமிகள் கலந்து வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயண உரம், களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் என்பனவும் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன.

அதேபோல, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் இரசாயணக் கழிவுகளும் நீரோடு கலக்கின்றன. இதனால், நீரின் ஆரோக்கியம் கெட்டு பயனற்றதாக மாறுகின்றது.

 இரசாயணம் கலந்த நீரை மக்கள் அருந்துவதாலும் பயன்படுத்துவதாலும் வாந்திபேதி, வயிற்றோட்டம் மட்டுமன்றி புற்றுநோய், சிறுநீரக நோய், தோல் நோய், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதை நாம் காணலாம்.

மேலும், நகர்புரங்களின் வீடுகளிலுள்ள குளியலறை, சமையலறை கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகள் என்பன காண்களினூடாக அருகிலுள்ள நீர்நிலைகளில் நேரடியாக விடப்படுகின்றன.

அந்த நீர்நிலைகளை பயன்படுத்தும் ஏழை மக்கள் பலவகையான நோய்களுக்கு உட்படுகிறார்கள். குறிப்பாக, சிறு குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்மார்களின் கருவிலுள்ள குழந்தைகளும் பாரிய உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.

இவ்வாறு, நீர் மாசடைவதால் மனிதன் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கபடுகின்றன. அத்துடன், நீர்வாழ் உயிரினங்கள் இரசாயணம் மற்றும் கழிவுகள் கலந்த நீரில் வாழ முடியாமல் இறக்கின்றன.

இன்னுமொரு கவலைக்குறிய விடயம் என்னவென்றால், மக்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு நீர்நிலைகளில் போடுகிறார்கள்.

இதன்போது நீரில் வாழும் விலங்குகள் அவற்றை உட்கொள்வதாலும் அவற்றால் பாதிக்கப்படுவதாலும் இறக்கின்றன. இதனால், குறிப்பாக மீன் வளம் பெருமளவில் குறைந்துள்ளது.     

அத்துடன், அளவுக்கு அதிகமான முறையில் இரசாயண உரம், பூச்சிக் கொல்லிகள் என்பவற்றை பயன்படுத்துவதனால், நிலம் வீணாவது மட்டுமன்றி நிலத்தடி நீரும் மாசடைகிறது.

மேலும், வாகன எண்ணெய் கழிவுகளும் தரைக்கீழ் நீரில் கலந்து அதன் இயல்புத்தன்மை கெட்டுப்போதலும் குறிப்பிடத்தக்கது.

சிறிது சிறிதாக அசுத்தமாக்கப்பட்ட நீரானது, ஒவ்வொரு நீர்நிலைகளிலும் சேர்ந்து இறுதியில் கடலை சென்றடைகின்றது. அதனால், கடலும் அசுத்தமடைகிறது.

இதன் விளைவாக, கடலிலுள்ள மீனினங்கள் உயிரிழப்பது மட்டுமல்லாது முருங்கைக் கற்பாறைகள், கடல் தாவரங்கள் என்பன பாதிக்கப்படுகின்றன.

இவை தவிர, கப்பல் எண்ணெய் கழிவுகள் கடலில் கலப்பதனாலும் கடல் நீர் மாசடைகின்றது.

கப்பல் போக்குவரத்தின் போது அதில் பயன்படுத்துகின்ற எரிபொருளான எண்ணெய் கசிவதாலும் இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படுகின்ற எண்ணெய் பொருட்கள், இரசாயணப் பொருட்களின் கசிவுகள் கடல் நீரில் கலக்கின்றன.

அதேபோல, அவ்வப்போது கப்பல்கள் தீப்பற்றி எரிவதாலும் கவில்வதாலும் கூட பாரியளவு கடல் பிரதேசங்கள் மாசுக்குட்படுவதை நம்மால் செய்திகளில் அறியக்கூடியதாக உள்ளது.

இதனால் பலவகையான மீன்கள், கடலாமைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் முதலியன பெருமளவு பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறான பல்வேறு முறைகளால் நீரானது மாசுபடுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் மாசுபட்ட நீரானது நிறைய மனிதர்களை காவு கொள்கிறது. அதாவது, நீர் மாசடைவானது (Water pollution in Tamil) போரை விடக் கொடியது என்றே கூற வேண்டும்.

பூமியிலுள்ள நீரின் அளவில் 0.5% மான நீரே குடிக்கத்தக்கதாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டு செல்லுமாயுன் 2050 ஆம் ஆண்டு ஆகும் போது தூய்மையான நீர் எதிர்ப்பார்க்குமளவு கிடைக்காமலே போகும் அபாயம் ஏற்படக்கூடும்.

நீரை வீண்விரயமாக்கல் (Wasting water in Tamil)

Importance of water in Tamil
Importance of water in Tamil

இன்று அதிகளவு நீரானது வீண்விரயமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு என்று நோக்கின், சமையல், குளியல் என்பவற்றின் போது தேவைக்கு மீறி அதிகளவு நீரை திறந்து விடுவதால் அளவுக்கு அதிகமான நீர் வீணாக செலவிடப்படுகின்றது.

சிறுவர்கள் குளிக்கும் போது தண்ணீரில் விளையாடுவது வழக்கம். இத்தகைய தருணங்களில் அதிகமான நீர் விரயமாவதைக் காணலாம்.

மேலும், பொது இடங்களில் நீர்க் குழாய்கள் சரிவர மூடாமல் இருப்பதை எம்மால் அன்றாடம் கவனிக்க இயலுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சொட்டு சொட்டாக நிறைய நீர் விரயமாவதை பார்க்கலாம்.

தொழிற்சாலை, கைத்தொழில் செயற்பாடுகளின் போது தேவையான பிரமாணத்தை விட அதிகப்படியான நீர் விரயமாவதைக் கூட அறிய முடிகிறது.

குடி நீரைக் கொண்டு செல்லும் கொள்கலன்கள் மற்றும் நீர் தாங்கிகளின் நீர்ப்பம்பிகள் வெடித்தோ அல்லது உடைந்தோ அல்லது சரிவர மூடாமலோ இருக்கும் சந்தர்ப்பங்களில் நீர் பல மடங்கு வீணாக சிந்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தும் நீரின் அளவை கட்டுப்படுத்தி பயன்படுத்தாமல் தேவையை விட அதிகமாக செலவு செய்யப்படுவதையும் குறிப்பிடலாம்.

இவ்வாறு வீடுகள், பொது இடங்கள், கைத்தொழில் பிரதேசங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் விரயம் செய்யப்படுவதை நம்மால் கண்கூட பார்க்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான முறைகளில் நீர் விரயமாவதை கட்டுப்படுத்தி தவிர்த்தல் முக்கியமானதொன்றாகும்.

நீரை பாதுகாக்கும் முறைகள் (Methods of conserving water in Tamil)

Importance of water in Tamil
Importance of water in Tamil

நீர் நிலைகளை பாதுகாப்பது எப்போதும் மிக முக்கியமானதொன்றாகும். எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இப்பொழுதிலிருந்தே நீரை பாதுகாப்பது அத்தியாவசியமாகின்றது.

விவசாய செயற்பாடுகளின் போது நிலத்திற்கு போடும் உரங்களை இயற்கை முறையில் பயன்படுத்த் வேண்டும். இதனால், மண்ணும் பாதுகாக்கப்பட்டு தரைக்கீழ் நீரும் பாதுகாக்கப்படும்.

தாவரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகள் என்பவற்றையும் தீங்கற்ற முறையில் இயற்கையாக தயாரித்து பயன்படுத்துவோம்.

அத்தோடு, இரசாயணம் அற்ற பொருட்களை கொண்டு விவசாயம் செய்ய முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். இதனால் தரைக்கீழ் நீரும் ஏனைய நீர் நிலைகளும் காப்பாற்றப்படும்.

நகரப்பகுதியிலுள்ள வீட்டுக் கழிவுகள், கடைகள், உணவகம் மற்றும் விடுதிகளின் கழிவுகளை சீரான முறையில் அகற்றல், பொலித்தீன் பிளாஸ்டிக் கழிவுகளை தகுந்த முறையில் அப்புறப்படுத்துதல் என்பன நீர் மாசடைவை தடுக்கின்றன.

அரசாங்கம் தகுந்த முறையான நீர்த்தேக்க முகாமைத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்த வேண்டும்.

அதிக நீர் மாசடைவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், கைத்தொழில்கள் என்பவற்றை சட்ட நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு கழிவகற்றும் பணிகளை தகுந்த முறையில் செயற்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். மேலும், கழிவு நீரை சுத்தப்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அத்துடன், பயன்படுத்துகின்ற நீரை எவ்வாறு மீள் சுழற்சி செய்யலாம் என்பதை அரச திட்டங்கள் மூலம் அறிமுகப்படுத்தி செயற்படுத்த வேண்டும்.

பயிர்ச் செய்கையின் போது பயிரிடப்படுகின்ற விதைகளுக்கு ஏற்ப, பயிர்ச்செய்கைக்கு ஏற்ப அளவான  நீரை பயன்படுத்துவதனால் நீர் வீண்விரயத்தை தடுக்கலாம்.

மேலும், நீரை மாசுப்படுத்தாதிருத்தல் நீரை சேமித்தல் (Save water in Tamil) தொடர்பான இறுக்கமான சட்டங்களையும் விழிப்புணர்வையும் அரசினால் செயற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல, மழைநீர் சேமிப்பு திட்டங்கள் ஊருக்கு ஊர் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்த வேண்டும்.

காடுகளை அழிக்காது மரங்களை வளர்த்து நீரினை பாதுகாக்கலாம். காட்டு வளங்களை பாதுகாப்பதால் மழை வீழ்ச்சி குறையாமல் இருக்கும்; நீரும் சேமிக்கப்படும்.

இதையும் வாசியுங்கள்:

நாம் இந்த பதிவில் நீர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இயற்கை வளம் என்று பார்த்தோம். இப்பொழுது நீரின் முக்கியத்துவம் (Importance of water in Tamil) பற்றி அறிந்த நாம் நீரை பயன்படுத்துவது பற்றியும் நீரை சேமிப்பது பற்றியும் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும்.  

எனவே, நீரை பாதுகாத்து நல் வாழ்வு வாழ்வோமாக.

மேலும் சில பயனுள்ள தகவல்கள்:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top