New Smart Tamil

நில மாசுபாடு | Land pollution in Tamil

Land pollution in Tamil

உலகில் தோன்றுகின்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையுமே தாங்கி நிற்பது இந்த நிலமே. பஞ்சபூதங்களில் முதலாவதாக குறிப்பிடப்படுவது நிலம் ஆகும்.

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட நிலமானது தற்போது நாளுக்கு நாள் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நில மாசுபாடு (Land pollution in Tamil) என்பது இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

காரணம், நிலம் மாசுபட்டால் அதனை சார்ந்திருக்கின்ற மற்ற இயற்கை வளங்கள் அனைத்துமே பாதிக்கப்படும் என்பதனால் ஆகும்.

நில மாசுபாடு (Land pollution in Tamil) போலவே உலகம் எதிர்நோக்கும் மேலும் சில பாரிய பிரச்சினைகளாக நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு போன்றவற்றை குறிப்பிடலாம்.

வாருங்கள் இனி, நில மாசுபாடு (Land pollution in Tamil) பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்வோம்.

நில மாசுபாடு என்றால் என்ன?

மனித செயற்பாடுகளின் காரணமாகவோ அல்லது இயற்கை விளைவுகளின் காரணமாகவோ நிலத்தின் அல்லது மண்ணின் தரம் குறைதல் மற்றும் வளமிழத்தல் போன்றவற்றை நிலம் மாசுபடுதல் (Nilam masupaduthal) அல்லது மண் மாசடைவு என்கிறோம்.

அதாவது, நேரடியாக அல்லது மறைமுக அடிப்படையிலான மனித செயற்பாடுகளினால் புவி மேற்பரப்பான நிலம் மற்றும் அதில் காணப்படும் மண் என்பவற்றின் இயற்கைத் தன்மை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே இவ்வாறு அழைக்கப்படுகிறது.

நிலம் மாசுபடுதல் காரணங்கள்

1. விவசாயத்தின் போது தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள், கிருமிநாசினிகள், இரசாயண உரம் மற்றும் களைக் கொல்லிகள் காரணமாக நிலம் மாசடைகிறது.

தற்காலத்தை  பொறுத்தவரையில் குறுகிய கால எல்லைக்குள் அதிக விளைச்சலைப் பெற்று இலாபம் பெறுவதனையே பலரும் நோக்கமாக கொண்டுள்ளனர் என்றால் மறுப்புக் கருத்து இல்லை.

இதனால், எப்படியாவது அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நிலத்திற்கு பொருத்தமற்ற இரசாயண உரங்கள், விவசாயத் தாவரச் செடிகள் மற்றும் கன்றுகளை பாதுகாக்க வேண்டும் என்று கிருமிநாசினிகள், தேவையற்ற இதர களைகளை அகற்றுவதற்கு களைக் கொல்லிகளையும் அளவற்று பயன்படுத்துகின்றனர்.

இதனால், நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டு மாசடைகிறது.

2. நகரமயமாதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சி காரணமாக நிலமானது மாசடைவுக்கு உட்படுகிறது.

பல்கிப் பெருகிவரும் நகர்ப்புறமாதல், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு என்பவற்றால் சடுதியாக நிலம் மாசடைகிறது என்பதில் ஐயமில்லை.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொழிற்சாலைக் கழிவுகளான இரசாயணக் கழிவுகள், உலோகக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள் மற்றும் விஷக் கழிவுகளாலும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் நிலம் எளிதில் மாசுறுகிறது.

எவ்வாறெனில், அகற்றப்படும் திரவ மற்றும் திடக்கழிவுகளை முறையற்றவாறு மண்ணில் கொட்டுவதால் நிலம் அசுத்தமடைகிறது.

3. சடுதியாக பெருகிவரும் சனத்தொகைக் காரணமாக நிலம் வேகமாக மாசடைகிறது.

இன்றைய நூற்றாண்டில் நொடிக்கு நொடி பெருகும் சனத்தொகை காரணமாகவும் அவர்களின் தேவைகளின் காரணமாகவும் நிலப் பயன்பாடானது வரையறை அற்று காணப்படுகிறது.

இதன்போது ஏற்படும் நில மாசடைவு ஆனது தடுக்க முடியாத மற்றும் தவிர்க்க முடியாததொன்றாகிவிடுகிறது எனலாம்.

இவர்களது உணவு, உடை, உறையுள், தொழில் மற்றும் இதர செயற்பாடுகளினால் நிலம் எல்லையற்று பயன்படுத்தப்பட்டு ஏராளமாக மாசுபடுத்தப்படுகிறது.

4. காடழிப்பும் நில மாசடைவிற்கு ஓர் ஏதுவாக அமைகிறது.

சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப பொருளாதார தரத்தை உயர்த்துவதற்காகவும், அபிவிருத்தி செயற்பாட்டினை விருத்தி செய்வதற்காகவும் ஏராளமான நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றன.

இதற்காக காடுகள் எல்லைகளற்று அழிக்கப்படுகின்றன. அதாவது பல்லாயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன.

சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பத்தில் 20 சதவீதத்தினை மீளவும் வளிமண்டலத்திற்கு அனுப்பி நிலத்தை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதில் காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு காடுகளை அழிப்பதனால் சூரிய வெப்பமானது நிலத்தை நேரடியாக தாக்குகிறது. மேலும், மழையினாலும் நேரடியாக பாதிப்படைவதோடு, மண்ணரிப்பும் ஏற்படுகிறது.

இதையும் வாசியுங்கள்:

இதனால், மண் தனது வளத்தினை இழந்து தரிசாக மாறி நிலம் பயனற்றதாகிப் போகிறது.

5. சுரங்கத் தொழிற்பாடும் நில மாசடைவிற்கு ஏதுவாகின்றது.

நிலக் கீழ் கனிமங்களை பெறுவதற்கும், மலைச் சுரங்க பாதைகள் அமைப்பதற்கும் இத்தொழிற்பாடு மேற்க்கொள்ளப்படுகிறது.

இதனால்,சுரங்கங்களில் இருந்து தோன்றி எடுக்கப்படும் கனிமங்களான இரும்பு, அலுமினியம், காரீயம், ஈயம், பாதரசம் போன்றன நிலச் சீர்கேட்டினையடைய வழிவகுப்பதுடன் நிலக் கீழ் நீரினையும் மாசடையச் செய்து அவை தரையினால் உறிஞ்சப்பட்டு நிலமும் மாசடைகிறது.

மேலும், சுரங்க செயற்பாட்டின் காரணமாக நில அடியில் இடைவெளிகள் உருவாகி பாரிய மண் சரிவு ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

6. கழிவுப் பொருட்களை கொட்டுவதாலும் நிலம் மாசடைகிறது.

உக்கிப் போகாத துணிகள், பிளாஸ்டிக, பொலித்தீன், கண்ணாடிப் பொருட்கள், டயர், வீட்டுக் கழிவுகள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாகவே மனிதர்களால் நிலத்தில் கொட்டப்படுகின்றன.

அத்துடன், குழித் தோண்டி புதைக்கப்படுகின்றன. இதனால், நிலம் நேரடியாக அசுத்தமடைகின்றது. மேலும், நிலக் கீழ் நீரும் மாசடைவது குறிப்பிடத்தக்கது.

7. கழிவு நீர் சுத்திகரிப்பும் நில மாசுறுதலுக்கு ஓர் காரணியாக அமைகிறது.

சாக்கடைக் கழிவுகள் மற்றும் மலசலக் கூட கழிவுகளை சுத்திகரிக்கும் போது திடக் கழிவுகள் அதிகளவு வெளியேற்றபடுகின்றன.

இவை நிலத்தில் புதைக்கப்டுகின்றன. இதனால் வெகுவாக நில மாசுபாடு (Land pollution in Tamil) ஏற்படும்.

8. இரசாயண மற்றும் அணு உலைகளையும் காரணியாக குறிப்பிடலாம்.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாகவும் அணுவாயுத சோதனைகள் காரணமாகவும் இரசாயண மற்றும் அணு உலைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு அவற்றில் இருந்து வெளியேறும் வேதியியல் மற்றும் கதிரியக்க கழிவுகள் நிலத்திற்கு தீங்கினை விளைவிக்கின்றன.

சில நேரங்களில் பூமிக்கடியில் குழித் தோண்டி இவை புகைக்கப்படுவதாலும் நில மாசடைவு (Land pollution in Tamil) ஏற்படுகிறது.

9. கட்டிட நிர்மாணப் பணிகளும் நில மாசடைவை ஏற்படுத்துகின்றன.

கைத்தொழில் புரட்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக அதிகளவு கட்டிட நிர்மாண செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதன்போது உலோகங்கள், பிளாஸ்டிக், சீமெந்து போன்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன. இவை தரையை மாசுபடுத்துகின்றன.

10. மருத்துவ கழிவுகளாலும் நிலம் மாசடைகிறது.

இரத்தம் தோய்ந்த பஞ்சு, ஊசி, கையுறை போன்றவற்றையும் சத்திர சிகிச்சை செய்து அகற்றப்பட்ட உடற்பகுதிகள் மற்றும் இதர மனித மற்றும் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பற்றவாறு முறையில்லாமல் எறிவதால் நிலம் மாசடைவது குறிப்பிடத்தக்கது.

நில மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்

Land pollution in Tamil
Land pollution in Tamil

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், நீர் நிலைகள் மற்றும் சுற்றுச் சூழல் என அனைத்தும் நில மாசடைவால் பாதிக்கப்படுகின்றன.

1. மண்ணின் இயற்கைத் தன்மை மாறுபடல்

நில மாசுபாட்டின் விளைவாக மண்ணின் இயற்கைத் தன்மை பாதிக்கப்பட்டு இழக்கப்படுகிறது.

இதன் காரணமாக மண் வறண்டு எவ்வித பயனும் அற்றதாய் மாறுகின்றது. காட்டு வளம், மேய்ச்சல் நிலங்கள், விவசாயப் போர்வை என்பன சிறிது சிறிதாக பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு தாவரப் போர்வை குறைவதால் உணவு மற்றும் பொருளாதார பிரச்சினைகள், விலங்குகளின் உணவு, உறையுள் இழப்பு, வெப்பமேற்றம், வறட்சி என்பன ஏற்படுகின்றன.

2. பல்வேறு நோய் நொடிகள் ஏற்பட்டு மனித நலம் பாதிக்கப்படல்

பூச்சிக் கொல்லிகள், இரசாயண உரம் மற்றும் நிலத்தில் கொட்டப்படும் இதர கழிவுகளால் தோல் புற்றுநோய், ஏனைய நோய்கள் மற்றும் இவை காற்றுடன் கலப்பதால் சுவாச நோய்களும் நீரில் கலப்பதனால் வயிற்றோட்டம், வாந்தி பேதி மற்றும் வெவ்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.

மேலும், மாசடைந்த நிலத்தில் விளைச்சல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களை உண்பதாலும் பாதிப்புக்கள் ஏற்படுதும் குறிப்பிடத்தக்கது.

3. விலங்கினங்களின் பாதிப்பையும் குறிப்பிடலாம்

நில மாசடைவை தாங்கிக்கொள்ளாத அல்லது சமாளிக்க முடியாத ஜீவராசிகள் வேறு ஓர் இடத்தை நோக்கி புலம்பெயர்வை மேற்கொள்கின்றன.

அவ்வாறு இன்றேல் அவை அம்மாசுபாட்டிலேயே வாழ்ந்து ஒரு கட்டத்தில் உயிரையும் விடுகின்றன.

4. காற்று மாசுபாடு ஏற்படல்

பூமியில் கொட்டப்படுகின்ற அல்லது சேர்கின்ற கழிவுகள் நாளுக்கு நாள் மலைபோல் குவிந்தும் கடல் போல் பரவியும் காணப்படுகின்றன.

இவை பெரும்பாலும் எரியூட்டப்படுகின்றன. இதனால், காற்று மாசடைவு ஏற்படும். மேலும், துர்நாற்றத்தில் இருந்து கிருமிகள் பரவக் கூடும். அத்தோடு, மீதேன் போன்ற வாயுக்களும் உருவாகி காற்றை மாசுபடுத்தும்.

5. பருவ காலநிலை மாற்றங்கள் ஏற்படல்

சுற்றுப் புற சூழலில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட நில மாசடைவும் காரணமாகின்றமையால் இவை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ பருவநிலை மாறுபாட்டினையும் ஏற்படுத்துகின்றன.

நிலத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளில் இருந்து வெளியேறும் வாயுக்களினால் புவி வெப்பமயமாதலுக்கு உட்படுகிறது. பச்சை வீட்டு விளைவும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, அதிக மழைவீழ்ச்சி அற்றுபோதல் அல்லது திடீர் அதிக மழைப் பொழிவு, சூழல் வெப்பம் அதிகமாதல் போன்ற பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

6. குடிநீர் பாதிக்கப்படல்

நிலத்தில் போடப்படும் கழிவுகள் மழை நீரினால் அடித்துச் செல்லப்பட்டு அல்லது கழுவிச் செல்லப்பட்டு குடி நீர் நிலைகளில் கலப்பதனால் நீர் மாசடைகின்றது.

மேலும், இவை நிலத்தில் உறிஞ்சப்படுவதால் தரைக்கீழ் நீருடன் கலந்து அந்த நன்னீரும் மாசடைகின்றமை குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

இதையும் வாசிக்க: 

7. காட்டுத் தீ ஏற்படுதல்

நிலத்தில் கொட்டப்படும் அல்லது சேர்க்கப்பட்ட கழிவுகள் காரணமாகவும் அதன் விளைவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் காரணமாகவும் வறட்சி ஏற்பட்டு வெப்பம் அதிகரிக்கப்பட்டு சூழல் காணப்படும்.

இதன்போது, சூழல் வெப்பச் சக்தி அதிகம் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உண்டு.

8. உணவுச் சங்கிலி பாதிப்படைதல்

நிலம் மாசடைந்த பின் அதை அறியாமல் அந்நிலத்திலுள்ள உணவை ஓர் உயிர் உட்கொள்ளும் போது அது தொடர் சங்கிலியாகும் போது ஒவ்வொரு விலங்கினத்தையும் பாதிக்கச் செய்கிறது.

உதாரணமாக, அழுக்கிலுள்ள ஒரு புழு ஏதோ ஓர் உணவை உண்ண, அப்புழுவை கோழி உண்கிறது என்போம். இதன்போது, பாதிப்படைந்த உணவை உண்ட புழு பாதிப்படைவது மட்டுமல்லாது அதை உண்ட கோழியும் விளைவை எதிர்நோக்கும்.

மேலும், இக்கோழியை மனிதனோ அல்லது வேறு உயிரினமோ உண்ணும் எனில், அவ்வாறு உட்கொள்ளும் விலங்கினமும் பாதிக்கக் கூடும் அல்லது இறக்கக் கூடும். இவ்வாறு உணவு சங்கிலி முறை பாதிக்கப்படும்.

9. புலம்பெயர்வுகள் ஏற்படல்

நிலம் மாசடைவதால் குடியிருப்புக்கள், நிலம் மட்டுமன்றி நீர், காற்று போன்றன மாசடைவையும் சந்திக்கின்றன.

இதனால், வாழத்தகுதியற்ற இடமாக கருதி மனிதன் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு வாழ்விடம் தேடி புலம் பெயர்வதும் குறிப்பிடத்தக்கது.

10. சுற்றுலாத் துறை பாதிக்கப்படல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காக சுற்றுலாத் துறை திகழ்கிறது என்றால் மிகையில்லை.

இத்தகைய சுற்றுலாத் துறை நிலம் மாசுபடுதல் (Nilam masupaduthal) காரணமாக வெகுவாக பாதிப்படைகிறது.

இதனால், சுற்றுலாத் துறையில் பொருளாதாரமானது வீழ்ச்சி கண்டு கொண்டே வரக்கூடும் எனலாம்.

நிலம் மாசுபடுதல் தடுக்கும் முறைகள்

Land pollution in Tamil
Land pollution in Tamil

முறையாக குப்பை கூளங்களை அகற்றுதல் அல்லது அழித்தல்

எல்லா விதமான குப்பைகளையும் ஒன்றாக தூக்கியெறியாது அவற்றை உக்கும் கழிவு, உக்காத கழிவு, மீள் சுழற்சி செய்யக் கூடியது மற்றும் மீள் பாவணை செய்யக் கூடியது என தரம் பிரித்து முறையாக அகற்ற வேண்டும்.

இயற்கையாகவும் பக்கவிளைவுகளற்றும் தயாரிக்கப்பட்ட உரம், கிருமிநாசினி, களை மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளல்

மனித மற்றும் விலங்கினங்களுக்கோ, சூழலுக்கோ எவ்வித தீங்கையும் விளைவிக்காதவாறு இயற்கையாக கிடைக்கக்கூடிய வேம்பு, சானம், காய்ந்த இலை குழைகள் போன்றவற்றை கிருமிநாசினியாகவும் உரமாகவும் பயன்படுத்தி நில மாசடைவை தடுக்கலாம்.

அத்துடன், இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதால் பாரிய நன்மையையும் பெறலாம்.

பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற பொருட்கள் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்தல் அல்லது குறைத்தல்

பொருட்களை கொள்வனவு செய்யும் போதோ அல்லது அன்றாட பயன்பாட்டின் போதோ பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவற்றை தவிர்த்து மூங்கிலினாலோ, பிரம்பினாலோ அல்லது ஓலையினாலோ தயாரிக்கப்பட்ட மீள் பாவணை செய்யக்கூடிய பொருட்களை உபயோகிக்கலாம்.

உதாரணமாக, பொலித்தீன் பைகளுக்கு பதிலாக துணியினால் தயாரிக்கப்பட்ட பைகள் அல்லது ஓலையினால் பின்னப்பட்ட கூடை, பை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

வீடுகளிலும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், கோப்பை இவற்றுக்கு பதிலாக கரைப்படாத இரும்பு (Stainless Steel), மட்பாண்டம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகர்புறங்களில் குப்பைகள் போடுவதை முற்றிலுமாக தவிர்த்தல்

பாதையோரங்கள், சாலையோரங்கள், பாவணையில்லா காணிகள், தெருவோரங்கள் போன்றவற்றில் முறையற்றவாறு குப்பைகளை எறிந்து விடாது முறையாக குப்பையகற்றும் ஓர் இடத்தில் போட வேண்டும். புதைக்கக் கூடியதை புதைத்தும் எரிக்கக் கூடியதை எரித்தும் அழிக்க வேண்டும்.

முறையற்று குப்பைகளை எல்லா இடங்களிலும் வீசுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்

அரச நிறுவனங்கள் மூலம் துண்டுப்பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள், பதாதைகள், மற்றும் மேடை அல்லது வீதி நாடகங்கள் மூலம் ஊர் ஊராகவோ, கிராமங்கள் தோறும் மற்றும் நகர்புறமாகவும் மீள் சுழற்சி, மீள் பாவணை, பயன்பாட்டை குறைத்தல் போன்றவற்றை புரியவைத்து நில மாசுபாடு (Land pollution in Tamil) பற்றிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

குப்பைகளை புதைத்தல் மற்றும் எரித்தலை தடுத்தலும் குறைத்தலும்

சூழலுக்கோ, நிலத்திற்கோ பங்கம் விளைவிக்கும் குப்பைகளை முறையற்றவாறு பாதுகாப்பின்றி புதைத்தலையும் எரித்தலையும் தடுத்தும் குறைத்தும் நில மாசடைவை குறைக்கலாம்.

நிலமானது இயற்கை அன்னையாக போற்றப்படுகிறது. இத்தகைய முக்கிய அம்சமானது சில இயற்கை மற்றும் பல செயற்கை காரணிகளால் மாசடைகின்றமை நாமறிந்த விடயமே.

இதையும் வாசிக்க:

அதிலும் மானிட செயற்பாடுகள் நேரடியாகவே நில மாசுறுத்தலை அச்சுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மானிடன் செய்யும் தவறினால் பாதிப்படைவது அவன் மட்டுமல்ல ஐயறிவுள்ள ஜீவராசிகள் உட்பட அனைத்துமே என்பது எடுத்துக் காட்டத்தக்கது.

எனவே, நிலத்தை பாதுகாத்து நிரந்தரமான நிம்மதியான, நீரோகியான வாழ்வையும் எதிர்காலத்தையும் பெறுவது எம்மனைவரினதும் அவாவாக இருக்க வேண்டும் என உறுதிகொள்வோம்.

மேலும் சில பயனுள்ள தகவல்கள்: 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top